-
தமிழ் செல்வி!
”அம்ம்ம்மா, என்னொட ஆபிஸ் ஐடி கார்ட் பார்த்தீங்களா?! ஆபிஸுக்கு லேட் ஆகுதுமா…. நேத்து நைட்டு இங்க தான் வைச்சேன், காணோமே!” என உறக்க கத்திக்கொண்டு மேசையின் மேலே தேடிக்கொண்டிருந்த ரமேஷை, சமையலறையில் இருந்து வெளியே வந்து, ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்து முறைத்த, அவனது அம்மா பங்கஜம், மேசைக்கு பின்புறம் கீழே விழுந்திருந்த அவனது ஐடி கார்ட்டை எடுத்து கொடுத்து விட்டு, எதுவுமே பேசாமல் மறுபடியும் சமையல் அறையில் நுழைந்தாள்.
ஐடி கார்ட்டை வாங்கிய ரமேஷ், சுவரிலிருந்த கடிகாரத்தை பார்த்து, “இன்னைக்கும் லேட் ஆயிடுச்சா… மேனஜர் கிட்ட திட்டு தான் வாங்க போறோன். சரி சாப்பாடு வேணாம் நான் ஆபிஸ்ல பாத்துக்கிறேன்” என்று அவசர அவசரமாய் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்தான்.
”இந்தா… சமையல் செஞ்சாயிடுச்சு.. ஒழுங்கா திண்ணுட்டு, மதியத்துக்கும் எடுத்துட்டு போய்டு, இல்லைன்னா… அத இரவைக்கு யாரு திண்றது?! ஒரு நாளப் போல லேட்டா எழுந்திரிக்க வேண்டியது, அப்பறம் இருக்குறவங்கள எல்லாம் படுத்த வேண்டியது. சிக்கிறம் எழுந்திருச்சு கிளம்பினா தான் என்ன?!” என்று சமையலறையில் இருந்தவாறு அலறினாள் பங்கஜம்.
“அம்மா, டைம் ஆயிடுச்சுமா…. இப்போ சாப்பிட்றதுக்கெல்லாம் நேரம் இல்லை, வேணும்னா.!, மதியத்துக்கு சாப்பாடு கட்டித்தா எடுத்துட்டு போறேன். நீ கத்த ஆரம்பிக்காத… Pleaseeee” என்று வெளியே கிளம்பியவன், வரவேற்பறையிலிருந்த ஷோபாவில் சற்றே அமர்ந்தான். ஷோபாவில் கிடந்த ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை ஆன் செய்தவாறு, செய்தித்தாளை எடுத்து அவசர அவசரமாய் புறட்ட ஆரம்பித்தான். தொலைக்காட்சியில் வழக்கமாக காலையில் உதயமாகும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு தமிழ் பற்றாளர், தமிழ் மொழியின் சிறப்பு இயல்புகளையும், அதில் அமைந்துள்ள “ல, ள, ழ” போன்ற மொழி சிறப்புகளை பற்றிப் பேசி கொண்டிருந்தார். செய்தித்தாள் வசிப்பதிலிருந்து அப்படியே அவன் கண்கள் தொலைக்காட்சி பெட்டிக்கு தவியது.
சில மணித்துளிகள் தொலைக்காட்சி பெட்டியை பார்த்து கொண்டிருந்த அவன் முன், தொலைக்காட்சியை மறைத்தவாறு வந்து நின்றது டிபன் கேரியர். “இந்த கிளம்பு” அப்படின்னு சொல்லிய அவன் அம்மா, அவன் கையிலிருந்த ரிமொட்டை உருவினாள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி அவனை ஏதோ ஈர்த்திருந்தாலும் ஆபிஸுக்கு நேரமாவதால், வேறு வழியில்லாமல் கிளம்பளானான்.
ஆபிஸுக்கு போவதற்காக பேருந்தில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்த ரமேஷுக்கு ஏனோ அந்த தொலைகாட்சி நிகழ்ச்சி அவனின் தோழி ஒருத்தியின் நினைவை அவனுக்கு ஏற்படுத்தியது. கொஞ்சம் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையோடு நினைவுகளை அசைப்போட ஆரம்பித்தான் ரமெஷ்.
நம்மில் பெரும்பாலனவர்களை போல், தமிழின் லகரங்களை (ல, ழ, ள) தவறாக உச்சரிப்பது ரமேஷின் பழக்கம். ஆனால், அவனின் நெருங்கிய தோழிக்கோ அது கொஞ்சமும் பிடிக்காது.
”ஏண்டா, இப்டி தமிழை கொலை பண்ற?!, அது பலம் இல்லடா… பழம்.. ’ல’ இல்ல ’ழ’“ அப்படியென்று அடிக்கடி கடிந்து கொள்வாள். அவள் மேல் இருக்கிற காதல், அவனை அவள் எப்படி திட்டினாளும், அவன் முகம் கோணாதவாறு பார்த்து கொண்டது.
அவளும் வேறு எந்த ஒரு விசயத்திற்காகவும் ரமேஷிடம் கடிந்து கொள்ள மாட்டாள். என்ன தமிழ் என்றால் கொஞ்சம் அதித பிரியம் அவளுக்கு… அதனால், இந்த ஒரு விசயத்துல மட்டும் அவளால் ரமேஷை திட்டாமல் இருக்க முடியாது.
ரமேஷுக்கும் தமிழ் மேல் மரியாதையும் விருப்பமும் இருப்பினும், என்ன செய்யவது, அவனுக்கு இந்த ”ழ” சுத்தமா அவன் நாக்குல வராமலே இருந்தது. ஆனால், அதுவே அவளுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
ரமேஷுக்கும் எப்படியாவது இந்த “ழ” வை சரியாக உச்சரிக்க வேண்டும் என்று தோன்றினாளும், என்ன முயற்சித்தாளும் அவனுக்கு அது ல தான்.
ரமேஷ் அவளுடன் பேசும் பொழுதெல்லாம், அவள் அடிக்கடி குறிக்கிட்டு குறிக்கிட்டு அவனது “ழ” உச்சரிப்பை சுட்டி காட்டிக் கொண்டே இருப்பாள். ஒரு சில நேரங்களில் அவனுக்கு கடுப்பு மண்டைக்கு ஏறும், இருந்தாலும் அடக்கிக்கொண்டு அமைதியாய் இருப்பான்.
இப்படியே போக போக, அதிகம் தாங்க முடியாதவனாய்… சில நேரம் பேசவே பேசமால் இருப்பான். ”எதை பேசினாலும் நடுவூல நிறுத்தி நிறுத்தி தப்பு சொல்லிட்டே இருந்தா, எப்டி பேசுறது?! எனக்கு என்ன பேச வந்தனோ, அது மறந்தே போயிடுது!” அப்படியென்று மிகவும் நொந்து போய் கேட்க தொடங்கினான்.
சில முறை குரலை உயர்த்தி கத்த ஆரம்பிப்பான். “ஏய்!, நான் சொல்றது உனக்கு புரியதுல?!, மொலின்றது ஒருத்தர் தான் சொல்ல வேண்டியத அடுத்தவங்களுக்கு சொல்ல பயன்படுற ஒரு கருவி, அவ்வளவு தான்…. ச்சும்மா… எப்போ பாரு……….”
அப்படியென்று, சில நேரம் கடிந்து கொண்டாளும், காலப்போக்கில் இதெல்லாம் பழகியவனாய்… அதேயே கொஞ்சம் சிரிப்புடன் சொல்லலானான்.
“அம்மா, தமில் செல்வி!, ஆள விடு!” என்று சொல்லி தப்பித்துகொள்ள கற்றுக்கொண்டான். உண்மையில் அவள் பெயர் தமிழ் செல்வி இல்லை. அவளை நக்கல் அடிப்பதற்க்காக அப்படி கூப்பிட தொடங்கினான்.
அவளும் சாதரணமானவள் இல்லை. அவளும் பதிலுக்கு “அது தமில் செல்வி இல்லை.. தமிழ் செல்வி!” என்று மீண்டும் அவனை மடக்குவாள்.
இவன் அடிக்கடி அப்படி அவளை கூப்பிட்டு, அவளது பெயரே “தமிழ் செல்வி” என்றானது!
இப்படியே அவர்கள் காதலுக்குள் ஒர் ஊடல் அடிக்கடி தமிழை மையம் கொண்டு, பின் கரையை கடக்கும்.
இப்படி தமிழ் என்ற ஒற்றை பொருத்தத்தை தவிர மற்ற எல்லாப்பொருத்தங்களும் அவர்களுக்கு சாதகமாய் இருந்ததால், அவர்கள் காதலுக்குள் எந்த சூறாவளியும் வராமல் இருந்தது.
இந்த நினைவுகளை எல்லாம் பேருந்தின் சக்கரம் சுழன்றதை போல் தன் மனத்தில் ஒரு கணம் சுழற்றி கொண்டிருந்தான் ரமேஷ், உதட்டில் அதே மெல்லிதான புன்னகையுடன்!
திடிர் என அவன் புன்னகையில் ஒரு தோய்வு ஏற்பட, அவன் முகம் சற்று இறுக்கமானது. அவன் நினைவில் இப்பொழுது வந்து நின்றிருந்தது மறக்க முடியாத அந்த நாள்.
ஆம், அதுவரை தமிழ் உச்சரிப்பில் பிழை செய்து கொண்டிருந்த ரமேஷ், தன் வாழ்க்கையிலும் கூடாநட்புடன் சேர்ந்து செய்ய கூடாத ஒரு பிழையை செய்து விட, அதை எப்படியோ அறிந்தாள் அவள்.
எந்த ஒரு பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறாய் இருந்ததால், ரமேஷ் எவ்வளவோ முயன்றும் அவளை சமாதானம் செய்ய முடியவேயில்லை. அன்று அவனை விட்டு விலகி சென்ற அவள், அதன் பின் அவனை காணவே இல்லை. இவனையும் அவளை காண வாய்ப்பளிக்கவேயில்லை அவள். அப்படியொரு ரோசக்காரி.
அதன் பிறகு எவ்வளவோ பெண்களை ரமேஷ் தினந்தோறும் அவன் வாழ்க்கையில் கடந்து வந்திருந்தாலும், அவளை தவிர அவனை யாரும் மனதளவில் கவரவில்லை.
இதில் என்னவொரு விசித்திரம் என்றால், இப்பொழுது எல்லாம், ரமேஷ் ”ழ” வை நன்றாகவே உச்சரிக்க செய்கிறான்.. ”ழ” மட்டுமல்ல, தமிழை எந்த ஒரு பிழையில்லாமலும் பேசுகிறான்.
என்ன செய்வது?!, வாழ்க்கையில் சில நேரம் நாம் சிலவற்றை தாமதமாகவே புரிந்து கொள்கிறோம்!.
பேருந்து தன் சக்கரங்களின் சுழற்சியை சற்றே நிறுத்த, தான் இறங்க வேண்டிய இடம் வந்ததை உணர்ந்த ரமேஷ் இறங்கினான்.
வீட்டில் சாப்பிடாமல் வந்திருந்த ரமேஷுக்கு சற்றே வயிறு பசிக்க ஆரம்பித்திருந்தது. பேருந்து நிறுத்தம் அருகிலிருந்த பெட்டிகடைக்கு சென்ற அவன், ஒரு ஐந்து ரூபாய் நோட்டை கடைக்காரரிடம் கொடுத்து, “அண்ணெ!, ஒரு பழம் எடுத்துக்கிறேன்” ( கவனிக்க ”ழ” ) என்று சொல்லி ஒரு வாழை பழத்தை உருவி தன் பசியை சற்றே ஆற்றிக்கொண்டு, அலுவலகத்திற்க்குள் நுழைந்தான்.
மேனஜர் இன்னும் வரவில்லை என்பதை அறிந்த ரமேஷ், அவசர அவசரமாய் தன் இருக்கையில் அமர்ந்து கணினியை ஆன் செய்தான். கணினி துவங்கி கடவு சொல் ( Password ) சரிபார்ப்பதற்க்காக வந்து நின்றது.
இப்பொழுது மீண்டும் அவனது உதடுகளில் ஒரு மெல்லிய சிரிப்பு.. அத்துடன் கடவு சொல்லை தட்டச்சினான் “கலைவாணி” என்று….
வின்
November 14, 2015 at 3:37 pmரீகன்
January 2, 2017 at 10:43 pmசரண்
January 2, 2017 at 11:05 pm